அவரது மகனின் உடலம் தகன அறையில் இடப்படுவதை பார்த்துக் கொண்டே, மொஹமட் பாஹிம் மயானத்திற்கு வெளியே நின்று, அழுது கொண்டிருந்தார்.
இறப்பின் பின்னர் ஜனாஸா எரிக்கப்படுதல் மற்றும் எந்தவித சிதைத்தல்களைத் தடைசெய்யும் நம்பிக்கை கொண்ட அந்த முஸ்லிம் மனிதர், “எனது குழந்தை தகனம் செய்யப்படுவதை எவ்வாறு நான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்” என வினவினார்.
பிறந்து சில நாட்களேயான அவர்களது மகன் மொஹமட் ஷயாக் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட பின் அவர்களது குடும்பம் அடி மேல் அடியைச் சந்தித்தது. பிறந்து 20 நாட்களேயான அப்பச்சிளம் சிசுவில் நடத்தப்பட்ட அன்டிஜென் சோதனை, குழந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை உறுதிப்படுத்தியது. குழந்தை ஷயாக்கிற்குப் பாலூட்டிய தாய் உட்பட, பெற்றோர்கள் மீது நடத்திய சோதனை, அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவித்தது.
கூடுதல் நம்பகத்தன்மை கொண்ட பி.சி.ஆர் சோதனையை குழந்தையிடம் நடத்துவதற்கு வைத்தியசாலை மறுத்ததுடன், குழந்தையின் தாயார் தனது குழந்தையுடன் இரவு தங்குவதற்கு அனுமதிக்கும்படி மன்றாடிய போதும், குழந்தையின் பெற்றோர்களை வைத்தியசாலையை விட்டுப் போவதற்கு நிர்ப்பந்தித்தது.
அதன் பின், அந்தப் பச்சிளம் குழந்தை ஷயாக் பல மணிநேர இடைவெளியில் இறந்தபோது, அவன் தனித்தேயிருந்தான்.
குழந்தையின் ஜனாஸாவைத் தகனம் செய்வதற்கு பெற்றோர்களின் சம்மதத்திற்கு வைத்தியசாலை அழுத்தத்தைப் பிரயோகித்தது, தான் அதற்கு மறுத்ததாகக் கூறும் பாஹிம், பதிலுக்கு ஷயாக்கின் ஜனாஸாவைப் புதைப்பதற்காக குடும்பத்திடம் கொடுக்கும்படி கேட்டு மன்றாடினார். நிலைமை ஒரு இழுபறிநிலையை அடைந்ததையடுத்து கலக்கமடைந்த பாஹிம், இறுதியில் இறந்துபோன அவரது மகனின் ஜனாஸாவின்றி லேடி றிஜ்வே வைத்தியசாலையை விட்டுச் சென்றார்.
கொரோனா வைரஸ் சோதனையில் தொற்று உறுதியாக்கப்பட்டதன் அடிப்படையில் குழந்தை ஷயாக்கின் ஜனாஸாவின் கட்டாயப்படுத்தப்பட்ட தகனத்தை அரசு நியாயப்படுத்தியது.
பல மாதங்களாக விசாரணைகளை பிற்போட்டு வந்த, இலங்கை உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கையைக் கேள்விக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்களை, டிசம்பர் 1ஆம் திகதி, விசாரணைகளின்றி தள்ளுபடி செய்ததுடன், தள்ளுபடி செய்ததிற்கான காரணங்களைத் தெரிவிப்பதற்கும் மறுத்தது. பரிகாரங்களுக்கு எந்தவித வழிவகைகளுமின்றி, இலங்கை முஸ்லிம் சமூகம் சிவில் ஒத்துழையாமைப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது. ஜனாஸாக்களைப் புதைப்பதற்கான உரிமையை அரசாங்கம் மறுக்குமாக இருந்தால், ஜனாஸாக்களைப் பாரமெடுப்பதற்கு கோராதிருப்பதற்கும் அல்லது சவப்பெட்டி மற்றும் தகனங்களுடன் சம்பந்தப்பட்ட செலவுகளைக் கொடுக்காதிருப்பதற்கும் முஸ்லிம் குடும்பங்கள் தீர்மானித்தன. இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 20 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கட்டளையின் பிரகாரம் அரச செலவில் தகனம் செய்யப்பட்டன. டிசம்பர் 8 ஆம் திகதி, குழந்தை ஷயாக்கும் அவர்களின் தராதரத்துடன் இணைந்து கொண்டான். ஆறு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்து பெற்ற மகனின் இழப்புக்காக அவர்கள் வேதனை கொண்டிருந்த போதிலும், குழந்தையின் ஜனாஸாவைக் கோராதிருப்பதற்கான கடினமான ஒரு தீர்மானத்தை பாஹிமும் அவரது மனைவியும் எடுத்தனர்.
வரலாறு முழுவதிலும் மதங்களின் முக்கியமான செயற்பாடுகளுள் ஒன்று இறப்பின் ‘பெரும் மர்மத்தை’ விளக்குவதாக இருந்து வந்துள்ளது. எந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலும், இறுதிச் சடங்குகள் என்பது மிகவும் தனிப்பட்ட ரீதியிலானது என்பதுடன் அவை, இறப்பின் பின்னான வாழ்க்கைக்கான ஒரு பாலமாகவும் மற்றும் பூவுலகில் வாழ்க்கை முற்றுப் பெற்றமைக்கான ஒரு முறையாகவும் மிகவும் முக்கியமானதாக இருந்தன. இஸ்லாமிய மத நம்பிக்கை உள்ள மக்களின் ஜனாஸாக்கள் அவர்களின் புனித நகரான மெக்காவின் திசை நோக்கியதாகவே எப்பொழுதும் புதைக்கப்படுகின்றன. இஸ்லாமிய புதைக்கும் பாரம்பரியங்களில், இறந்த ஒருவரின் ஜனாஸா ஒரு போதும் பதப்படுத்தப்படுவதில்லை, ஆனால், அவை வெறுமனே கழுவப்பட்டு வாசனைத் தைலங்கள் தெளிக்கப்பட்டு நறுமணமூட்டப்படுகின்றன.
“பாவிகளையே நரகத்தின் நெருப்பு தீண்டும் என பிறப்பிலிருந்தே கற்பிக்கப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கு தகனம் செய்வது எனும் நிலைப்பாடு மிகவும் பாரதூரமானது. தாங்கள் கடவுளைச் சந்திக்கும் போது அவர்களுக்கு மறுவாழ்வளிக்கப்படுமென மார்க்கப் பற்றுக் கொண்ட முஸ்லிம்கள் நம்புகின்றனர். மார்க்கப் பற்றுக் கொண்ட முஸ்லிகளுக்கு, தகனம் செய்யும் நடவடிக்கை, குடும்ப உறுப்பினரொருவர் நரகத் தீயிலிட்டுப் பொசுங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றதாகும்”
“முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பித்தல்” என்பதை சிங்களப் பெரும்பான்மையினருக்கு காண்பிக்கும் அரசாங்கத்தின் ஒரு வழிமுறையே இந்தக் கொள்கையாகும்.
“Playing With Fire” என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.