இலங்கைக்கு வந்து இறங்கி, முதல் screening காக காத்திருந்தபோது எனக்கு அருகில் ஒரு அம்மா இருந்தார்.
ஐம்பது வயது தட்டிய தேகம். பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் நிரப்ப வேண்டிய சில படிவங்களை என்னிடம் கொடுத்து நிரம்பித் தரச் சொன்னார்.
நான் மூன்று படிவங்களை நிரப்பி முடிக்கும் வரை பேசிக்கொண்டே இருந்தார்.
அவர் பேசியவற்றில் சிலவற்றை மட்டும் அப்படியே இங்கு சொல்கிறேன்.
“மூணு வருசத்துக்கு பிறகு ஊருக்கு வாறன்” “ரெண்டு பொண்ணுங்க”.
“ஒண்ட கட்டிக்குடுத்திட்டேன். ரெண்டாவதுக்கு சுகம் இல்ல” “மூணு மாசத்துக்கு முன்னுக்கே எனக்கு வேலை போயிட்டு”.
“மூணு மாசமா சம்பளம் இல்ல” “ஊருக்கு வாறதுக்கு இங்க கடன் வாங்கித்தான் விமான டிக்கட்டுக்கு (120’000 LKR) கட்டினேன்”.
“அந்தக் கடனை எப்பிடி அடைக்கப்போறன்னு தெரியல்ல”
“அங்க இலங்கை தூதரகத்தில் பிசிஆர் செய்றதுக்கு கூட கஷ்டப்பட்டுத்தான் காசு தேடி கட்டினேன்”.
“இங்க பிசிஆர் க்கும் நான்தான் கட்டோணும்னு சொன்னாங்க”
“இங்க ஹோட்டல் கரண்டினா இல்ல அரசாங்க தனிமைப் படுத்தல் நிலையமா எண்டு கேட்டாங்க”.
“கதையை பார்த்திங்களா, 175’000 ரூபா கட்டி ஹோட்டல்ல நிக்க முடியும்ன்னா நான் எதுக்கு சுகமில்லாத பிள்ளையையும் விட்டுப்போட்டு வெளிநாட்டுக்குப் போய் அலையப் போறன்!”
இதுதான் அந்த தாய் பேசிய கதைகள், இந்தக் கதைகள் எல்லாம் விமான நிலையத்தோடு நின்று விடுகின்றன. அல்லது நிறுத்தப்பட்டு விடுகின்றன.
இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய விடயங்கள்;
1. இலங்கைக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த அம்மா அன்னியச் செலாவணியை உழைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
2. வரி கட்டிக்கொண்டிருக்கிறார்.
3. ஸ்ரீலங்கன் விமான சேவையைவிட மிகவும் மலிவான விமான சேவைகள் உலகில், அதுவும் விசேடமாக gulf இல் உண்டு. ஸ்ரீலங்கன் எயார்லைனோடு ஒப்பிடும்போது அவர்களுடைய operational expenses, route-cost expenditures உம் குறைவு.
ஆனால், ஸ்ரீலங்கன் விமான சேவையே இற்றைவரை இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரப் பயன்படுத்தப்படுகிறது.